சிறிலங்கா அரச நிறுவனங்களில் பொது மக்கள் சந்திக்கும் தினத்தில் மாற்றம்

224 0

சிறிலங்கா அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திக்கும் தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக இணை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திப்பு இதற்கு முன்னர் புதன்கிழமைகளில் இடம்பெற்று வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதன்கிழமைகளில் நாடாளுமன்ற அமர்வுகள், அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறுவதால் மக்கள் பிரச்சினைகளை  மக்கள் பிரதிநிதிகளுக்கு வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக பிரகடனப்படுத்தினால் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டதையடுத்து, இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெல் தவிர்ந்த வேறு பயிர்செய்கைகளுக்கான உரம் 50 கிலோகிராம் கொண்ட மூடை ஒன்று 1500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.