20ஆவது திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேறும்- ஜீ.எல்.பீரிஸ்

218 0

20ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றுவோம் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக எதிர்த் தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க முனைகிறார்கள்.   19ஆவது திருத்தம் எந்நோக்கத்துக்கு உருவாக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்திருப்பார்கள். அத்துடன், ஜனநாயகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் ஏதும் 20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை.

திருத்தம் தொடர்பாக எதிர்த் தரப்பினர்  மாத்திரமல்லாது  இலங்கை பிரஜை எவரும் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யமுடியும். இந்நிலையில், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு 20ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.