நாட்டில் ஊடக சுதந்திரம் முழுஅளவில் உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு திட்ட விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
இந்த கருத்து தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக ,நாட்டில் உயர்மட்டத்திலான ஊடக சுதந்திரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஊடக சுதந்திரம் நாட்டில் முழுஅளவில் உண்டு.
ஊடக சுதந்திரம் தொடர்பில் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து வந்த களங்கத்தை சமகால அரசாங்கத்தால் நீக்க முடிந்துள்ளது.ஊடகங்களுக்கு இன்று உயர்ந்தபட்ச சுதந்திரத்தை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வருடாந்தம் மேற்கொள்ளும் தரப்படுத்தலில், இலங்கை 141 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 2014ஆம் ஆண்டு 165 ஆவது இடத்தில் இருந்தது.ஊடகவியலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும் அவர்களின் சேமநலனுக்கான தேவையான நடவடிக்கைகளுக்கான சட்டமூலம் ஒன்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி விருது வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.பண்டித் அமரதேவவின் கனவை நனவாக்கும் வகையில் அமரதேவ இசை நிலையம் ஒன்றும் அமைக்கப்படும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் தெரிவித்தார்.