சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அழகிய நத்தத்தை சேர்ந்தவர் நடராஜன் (62). இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் சம்பா நடவும், 4 ஏக்கரில் நேரடி விதைப்பும் செய்திருந்தார்.
காவிரியில் தண்ணீர் வராததால் நேரடி விதைப்பு முளைக்காமல் வீணாகி விட்டது. நடவு செய்த 3 ஏக்கரில் டீசல் என்ஜின் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.
ஆனால் தினந்தோறும் டீசல் வாங்குவதற்கு போதிய பணம் இல்லை. இதனால் தண்ணீரின்றி ஒரு மாத பயிரும் கருகியது.
இந்த நிலையில் வயலுக்கு சென்ற நடராஜன் பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் நடராஜன் இறந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த நடராஜனுக்கு மாலதி என்ற மனைவியும், பாலசுந்தரம் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர். நடராஜன் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் இதுவரை தற்கொலை, மயங்கி விழுந்து சாவு என 17 விவசாயிகள் இறந்துள்ளனர்.