இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாள நாட்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அந்நாட்டின் புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை சுமார் 5.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அந்நாட்டின் புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிழக்கு நேபாளத்துக்கு உட்பட்ட பல பகுதிகள் மற்றும் காத்மாண்டு நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் கொண்ட புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள நேபாளத்தில் கடந்த 2015-ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரிக்டர் அளவுகோலில் நான்காகவும் அதற்கு அதிகமாகவும் 475 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.