எனது கணவரை சாக விடுங்கள்: நீதிமன்றத்தில் முறையிடும் பெண்மணி!

295 0

v556பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் வாகன விபத்து ஒன்றில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் பால் பிரிக்ஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோமா நிலையில் உயிர் காக்கும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

வளைகுடா போர் முடிந்த பின்னர் தாயகம் திரும்பிய 43 வயதாகும் பால் பிரிக்ஸ் உடனடியாக பொலிஸ் அணியில் சேர்ந்து சேவை புரிந்து வந்துள்ளார்.

இவர் பணியில் இருந்தபோது கடந்த ஆண்டு யூலை மாதம் வாகன விபத்தில் சிக்கி தலையில் கனத்த காயம் பட்டு கோமா நிலையில் உள்ளார். இந்த நிலையில் தமது கணவருக்கு அளித்துவரும் அனைத்து உயிர் காக்கும் சிகிச்சைகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவரை கெளரவத்துடன் சாக அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி லிண்சே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் குறித்த வேண்டுகோளுக்கு மருத்தவகள் குழு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், மான்செஸ்டர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் லிண்சே.

குறித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரிக்ஸ் குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அரசு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவர் அடங்கிய குழு ஒன்று நேரடி ஆய்வை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அதில் பிரிக்ஸ் விவகாரத்தில் மேலும் நம்பிக்கை கொள்ள வகை இல்லை எனவும், அவர் மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17 மாதங்களாக பிரிக்ஸ் இதே நிலையிலேயே தொடர்வதாகவும் மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நீதிபதிகளால் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

பிரிக்ஸ் விபத்துக்குள்ளாக காரணமான 26 வயது இளம்பெண்ணிற்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கடந்த யூலை மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.