நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி

318 0

fidel-castro2கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

கியூபாவின் பிரதமர் மற்றும் அதிபர் என 50 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ. புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ தனது 50 ஆண்டு பதவிகலாத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

உடல்நலக்குறைவால் கடந்த 2008ஆம் ஆண்டு தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். உடல்நலக்குறைவால் தனது 90 வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

அவரது மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசுப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஸ்ட்ரோவின் விருப்பப்படி அவரது உடல் அவரது மறைவுக்குப் பின்னர் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. ஹாவானாவில் உள்ள ஜோஸ் மார்டி நினைவிடத்தில் அவரது அஸ்தி இன்றும் நாளையும் வைக்கப்படும் என்றும் அங்கு கியூப மக்கள் அவருக்கு பிரியாவிடை கொடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அஸ்தி நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர்3 ஆம் தேதி வரை கேரவன் வேன் மூலமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாவானாவில் இருந்து சான்டியாகோ வரை நாடு முழுவதும் சுமார் 900 கிலோ மீட்டர் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட இறுதி ஊர்வலமும் நடைபெறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கியூபா மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய நாள் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சாண்டியாகோ நகரில் உள்ள கல்லறையில் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி புதைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.