தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை- சீனித்தம்பி யோகேஸ்வரன்

375 0

download-1தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி,45 முஸ்லிம் மக்களும் மாவீரர்களாக தியாகம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு நேற்று மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் தியாகங்களைச் சரியாக மதிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறுவதே போர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், உள்நாட்டில் உரிமைக்காகப் போராடுவது போராகக் கொள்ளப்படுவதில்லை என்றும் இதனை விளங்கிக் கொள்ளாத நிலையினாலே, தமிழ் போராளிகள் மீதும்தமிழ் மக்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சீக்கியர்களை இந்திய இராணுவம் அழித்துவிட்டு வெற்றிவிழா கொண்டாட நினைத்த தருணத்தில், நம்நாட்டு மக்களை நாமே அழித்துள்ளோம், இதற்கு வெற்றிவிழா வேண்டாம் என அப்போதிருந்த பிரதமர் இந்திராகாந்தி தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீரத் தாய்மார் வீரர்களைப் பெற்று மண்ணுக்கு வித்திடல்களாக ஆக்கியிருப்பதாகவும் வீர மறவர்களைப் பெற்று மாபெரும் தியாகங்களைச் செய்தமைக்காக வீரத் தாய்மார்களையும் நினைவு கூருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.