20 வது திருத்தம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – ஜி.எல்.

278 0

சிறிலங்கா அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் அதுகுறித்து தெளிவுபடுத்தி பொது சொற்பொழிவு நடத்த வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த அவர், நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஒரு பொது கருத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தத் திருத்தங்கள் குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தவறினால், கடந்த காலங்களில் இருந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த கலாசாரம் மீண்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து நீக்க அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் சட்டவிரோத துப்பாக்கி பழக்கத்திற்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.