கொரோனா தடுப்பில் தமிழகம் பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது- அமைச்சர் பேட்டி

352 0

இந்தியாவிலேயே தமிழகம் கொரோனா தடுப்பில் பாதுகாப்பு கேடயமாக விளங்கி வருகிறது என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் கொரோனா நோயாளிகளுக்காக 56-வது நாளாக அம்மா கிச்சன் மூலம் சத்தான உணவுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி வருகிறார். இன்று அம்மா கிச்சன் பணிகளை பார்வையிட்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோயால் வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக திகழும் வண்ணம் நோய் தடுப்பு பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 14 முறை மாநில பேரிடர் கூட்டத்தையும், 9 முறை மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை காணொளிக்காட்சி மூலம் நடத்தியும், தலைமைச் செயலாளர் மூலம் 11 முறை மாவட்ட கலெக்டர்கள் காணொளி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தியும், அதனைத் தொடர்ந்து மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்-அமைச்சரையும், அவருக்கு துணை நிற்கும் துணை முதல்- அமைச்சரையும் மக்கள் பாராட்டுகிறார்கள்.

சிறப்பான நோய்த்தடுப்பு நடவடிக்கை மூலம் 3,49,682 நபர்களை குணப்படுத்தி அவர்கள் இல்லம் திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்த நபர்கள் 85.45 சதவீதமாக உள்ளது.

அதே போல் இறப்பு 1.7 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் கொரோனா தடுப்பில் பாதுகாப்பு கேடயமாக விளங்கி வருகிறது.

பெரியாறு பிரதான கால்வாய் பகுதிகளில் இரு போக சாகுபடி பகுதிகளுக்கு முதல் போக பாசன பகுதிகளில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பயன் பெற செய்யும் வகையில் 120 நாட்களுக்கு 6.739 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்டு மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவிட் காலத்தில் தமிழகத்தில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இதன் மூலம் தமிழகத்திற்கு 31,464 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை பெற்றுத்தந்து 67,712 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதில் தமிழகம் முதன்மையாக உள்ளது என்று தனியார் ஆய்வு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாபெரும் சரித்திர சாதனைகளை அ.தி.மு.க. அரசு நிகழ்த்தியுள்ளது.

அதேபோல் ஏப்ரல் முதல் தற்போது வரை 1,53,576 சுய உதவிக் குழுக்களுக்கு 5,974 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்களின் மூலம் தமிழகத்தை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் முதல்-அமைச்சருக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதல்- அமைச்சருக்கும் அம்மா பேரவை கோடான கோடி நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.