குடியரசு கட்சி மாநாட்டிற்கு பிறகு ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் உள்ள ஆதரவு சற்று குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நாடு முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரச்சாரத்திற்கு மத்தியில் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே கூறுகின்றன.
இந்நிலையில், குடியரசு கட்சி மாநாட்டில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
தி ஹில் நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய அளவில் ஜோ பிடனின் முன்னணியானது சற்று குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜோ பிடன், 50 சதவிகித வாக்காளர்களின் ஆதரவோடு முன்னிலை வகித்தார். டிரம்பிற்கு 44 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு அளித்தனர். குடியரசுக் கட்சி மாநாட்டைத் தொடங்குவதற்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 23) நடந்த வாக்கெடுப்பில் ஜோ பிடன் 52-42 என முன்னணியில் இருந்தார்.
தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.