சிறிலங்காவில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் வரி!

288 0

சிறிலங்காவில் வனவிலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அரசாங்கம் விரைவில் புதிய வரியை அறிமுகப்படுத்தும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யானைகள் மற்றும் மான்களின் சடலத்தில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், பிளாஸ்டிக்கின் தாக்கத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பதிப்பினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியை ஊக்கப்படுத்த இந்த தயாரிப்புகளுக்கு கடுமையான வரி விதிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியையும் அரசாங்கம் நிறுத்திவிடும், ஆனால் அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் கிட்டத்தட்ட 70 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது என தேசிய கணக்காய்வு அலுவலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இது முதன் முறை அல்ல. பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அழுத்தம் காரணமாக 1994 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் இரண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவை பயனற்றவையாகியது.

2008 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரிச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், நுகர்வோரின் நடத்தை முறைகளை மாற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டது.

பின்னர் 2018 ஆம் ஆண்டில், 20 மைக்ரோன் அல்லது அதற்குக் குறைவான தடிப்பு கொண்ட பொலித்தீன் அல்லது பொலித்தீன்தயாரிப்புகளின் பயன்பாட்டை மட்டுப்படுத்திய ஒரு பகுதி தடை நடைமுறைக்கு வந்தது.

2018 சட்டத்தின் கீழ் தடையை மீறும் எந்தவொரு நபரும், தண்டனைக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது 15,000 ரூபாய் அல்லது இரண்டு அபராதங்களும் விதிக்கப்படும்.