அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் போகும்!

335 0

அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13,ம், 19,ம் திருத்தத்தை மாற்றுவது தொடர்பில் மேலும் கருத்து கூறுகையில்,
புதிய அரசாங்கம் தற்போது பதவி ஏற்றதுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஷபக்ச 19,வது அரசியல் அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்து 20,வது அரசியலைமைப்பை கொண்டு வருவதாகவும் அதேவேளை 13,வது அரசியலமைப்பில் உள்ள சில விடயங்களை மாற்றம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த இரண்டு அரசியலமைபுகளும் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்களை விட சிறுபான்மை மக்களுக்கே ஓரளவு சில நன்மைகள் இருந்தன. அதை நீக்குவதால் அல்லது மாற்றுவதால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை மக்களே.

அரசியல் அங்கம் வகிக்கும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் இதன் தாக்கத்தை அறிந்து உடனடியாக தமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து சிறுபான்மை மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வரையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெற்றும் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

ஈழ விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் நியாயத்தன்மையை உணர்ந்ததன் பிரதபலிப்பாகவே இந்தயாவின் தலையீடு காரணமாக இலங்கை இந்திய ஒப்பந்தம் கடந்த 1987 யூலை 22,ம் திகதி கைச்சத்திடப்பட்டு மாகாணசபைகள் சட்டமூலமாக 13,வது அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மாகாணசபை முறைமை இலங்கையில் உருவானது.

இதற்கான காரணம் ஆயுதம் ஏந்தி தமிழ் இளைஞர்கள் போராடியதன் விளைவு என்பதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழ் இளைஞர்களின் தியாகத்தின் பிரதபலிப்புத்தான் மாகாணசபைகள் உருவானது. அதில் அதிகாரங்கள் போதியளவு இல்லை என்பது உண்மைதான் இருந்தாலும் மத்திய அரசு மாகாணரசு என இரண்டு நிர்வாக கட்டமைப்பு ஒன்று இலங்கையல் உள்ளது என்றால் எமது தமிழ் அரசியல் தலைவர்களின் அகிம்சை போராட்டமும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டமும் என்பதை இன்றைய தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த முதலாவது மாகாணசபை தேர்தல் 1988 இல் இடம்பெற்றதும் இந்த 13,வது அரசியல் யாப்பின் மூலம்தான் பின்பு 2006,ல் ஜே.வி.பி வழக்கு தாக்கல் செய்து சட்டத்தினால் வடக்கு கிழக்கு வெவ்வேறாக பிரிக்கப்பட்டாலும் இரண்டு மாகாண சபைகள் உருவானாதும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் தாயகம் என்பது இணைந்த வடகிழக்கு என்பதே தமிழ் தேசிய அரசியல் சித்தாந்தமாக இன்றுவரை உள்ளது. அதிகாரப்பரவலுக்கு மாகாணசபை முறை ஆரம்ப புள்ளியாக உள்ளது என்பதை சர்வதேசமும் ஏற்றுள்ளது. இவ்வாறான அரசியலைப்பை மாற்றுவதை அனுமதிக்கமுடியாது.

இது போலவே 19,வது அரசியல் யாப்பு ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் பல சுயமாக இயங்குகின்றன. பொலிஸ் சேவை, நீதிச்சேவை, தேர்தல் சேவை, கருத்துச்சுதந்திரம், தகவல்அறியும் நடைமுறை என பல நன்மைகள் 19,வது சரத்தில் உள்ளன. அதனூடாக ஓரளவு ஜனநாயக மரபுகள் இலங்கையில் பாதுகாக்கப்பட்டன.

இதை நீக்குவதால் மக்களுக்கான அதிகார வரம்புகள் தனிநபர் அதிகாரமாக ஜனாதிபதிக்கு செல்லுமாயின் சர்வாதிகார ஆட்சிக்கு நாடுமுகம் கொடுக்கும் நிலை ஏற்படும். பழையபடி குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறினார்.