எச்.வசந்தகுமார் எம்பி உடல் நல்லடக்கம்

352 0

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கடந்த 10-ந்  தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி தமிழ்செல்வி, உதவியாளர் கோபி ஆகியோரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து எச்.வசந்தகுமார் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர் நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை உயிர் இழந்தார்.
எச்.வசந்தகுமார் உயிர் இழந்த அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையில் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. சென்னை தி.நகர் நடேசன் தெருவில்  உள்ள அவரது இல்லத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எடுத்து செல்லப்பட்டது. அகஸ்தீஸ்வரம் இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சார்பில் கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எம்பி வசந்தகுமார் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பிறகு வசந்தகுமார் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் வசந்தகுமார் எம்.பி. உடல் அவரது தாய், தந்தை நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.