தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கிறது!ன்ற

293 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கின்றது என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட சக்தியை அழித்தது போன்று தமிழ்தேசியத்தை சிதைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு பேரினவாத ஆசீர்வாத பண முதலீடுகளுடன் மிகவும் அசிங்கமான அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை பொறுமையாக ஜனநாயக அஹிம்சை ரீதியில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

ஏட்டிக்கு போட்டி இழுக்கின்ற அரசியல் முதிர்ச்சி பக்குவ ஞானமில்லாது, தேசிய உணர்ச்சியை பேரினவாதிகளிடம் அடமானம் வைத்த ஒரு கூட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது. ஏட்டிக்கு போட்டியாக அடி தடி வெட்டுக்குத்து அரசியலை தவிர்த்து நியாய நிதானமாக அரசியல் முன்னெடுப்புகளை கூட்டமைப்பு மேற்கொள்கிறது.

போராட்டத்தை காட்டிக்கொடுத்து எமது தமிழ் இனத்தை அழித்து பலவீனப்படுத்திய கூட்டணிகள் பொய் வாக்குறுதிகளையும் பிரசாரங்களையும் மேற்கொண்டு தமிழ் தேசியத்தை காலால் மிதித்து நசுக்கி விடலாம் என்ற பாணியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காலடி பதித்துள்ளனர்.

பேரினவாத அபகரிப்பின் கீழுள்ள திருகோணமலை மற்றும் அம்பாறையினை மீட்க வேண்டும். அதனை விடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று, கிழக்கை மீட்பது எவ்வாறு என்று மக்கள் மத்தியில் கேள்வி நிலவுகிறது. கிழக்கிலிருந்து அம்பாறை, திருகோணமலையை கைவிட்டு விட்டார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது. பேரினவாதம் அடித்தாலும் உதைத்தாலும் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் அலங்கார அமைச்சுப் பதவியே தவிர வேறொன்றுமில்லை.

எனவே தமிழ் மக்களை பொறுத்தமட்டில் சுயமரியாதை உரிமையோடு கூடிய அபிவிருத்தியை விரும்புகிறார்களே ஒழிய கண்களை விற்று ஓவியம் வாங்குவதற்கோ அத்திவாரத்தை இடித்து கட்டடம் கட்டுவதற்கோ மரத்தின் ஆணிவேரை அறுத்து அரசியல் செய்வதற்கோ தமிழ்மக்கள் விரும்பவில்லை. எனவே தன்மானத் தமிழர்கள் எல்லோரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பக்கமாக நிற்பார்களேயொழிய எந்த நிலையிலும் தங்களுடைய தன்மானத்தை மாற்றானுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஒரு கொள்கை இலக்குடன் பயணிக்கின்ற கூட்டமைப்பு சரணாகதி அரசியலுக்கு ஒரு போதும் தயாராக இல்லை என்றார்.