வர்த்தக ரகசியங்களை திருடியதாக அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் கைது

349 0

வர்த்தக ரகசியங்களை திருடிய குற்றச்சாட்டில் சீன ஆராய்ச்சியாளரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. பல ஆண்டுகளாக சட்டவிரோத உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடும்படி சீனா உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில், விர்ஜீனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், சீனாவைச் சேர்ந்தவருமான ஹைஜோ ஹூ என்பவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வர்த்தக ரகசியங்களை திருடிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான ஹைஜோ ஹூ, அங்கீகாரமின்றி கம்ப்யூட்டரை அணுகியதாகதாகவும், பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கான அங்கீகாரத்தை மீறியதாகவும், வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்ல முயன்ற சில நாட்களில் கிரிமினல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.