யாழ்ப்பாணத்தில் டெங்கினை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்
யாழ் குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,
“யாழ் போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் 7 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் யாழில் 3,690 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அத்துடன் இவ்வருடம் நேற்று (28) வரை 900 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருக்கிறார்கள்.
இனிவரும் காலங்களில் மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக காணப்படும் இதன்காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகளவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது
மழைநீர் தேங்கும் இடங்களில் டெங்கு தொற்றினை ஏற்படுத்தக்கூடிய நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு சிகிச்சைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் உள்ளது. அதுபோல டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அதிக அளவு நீராகாரம் எடுப்பதன் மூலமே டெங்கிலிருந்து குணமடைய முடியும்.
டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை இத்தருணத்தில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொது சுகாதார அதிகாரிகளிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.