தொண்டமானாறு பலத்தினுடான போக்குவரத்திற்கு அனுமதி

245 0

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலத்தின் ஊடாக மக்களை போக்குவரத்திற்கு அனுமதிக்கும் வழிபாடுகளுடன் கூடிய சம்பிரதாய நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பால நுழைவாயிலில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைப் பகுதியில் உள்ள நீரியல் வளத்திணைக்களத்திற்குச் சொந்தமான பாலத்தின் ஊடாக போக்குவரத்திற்காக நீரியல் வளத்தினைக்களத்தின் பொறியியலாளர்களின் ஒத்துழைப்போடு திறக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தினுடான போக்குவரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை வருடா வருடம் வலி. கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.

இம்முறை கொரோனா முன்னெச்சரிக்கை வழிவகைகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவிற்கு இணங்க மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களின் எண்ணிக்கை நேர வரையரைகள் சுகாதார விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு கடைப்பிடிக்கப்படும்.

எமது சபை ஊடாக வாகன தரிப்பிட வசதிகள், ஒளியூட்டல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்வேவைகள் மாலை 7 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ஆலயத்தினை அடையும் பக்தர்கள் வீடியோ கமராக்கள் மூலம் சுகாதாரத்தினை மையப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளையும் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து பாலத்தின் பகுதிகள் உரிய நேர அவகாசத்தில் தொற்றுநீக்கி விசுறும் ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

மக்கள் பாலத்தினுடாக பயணிக்கையில் தம்மை அடையாளப்படுத்தி உரிய பதிவுகளுக்கு உட்படுத்தியே ஆலயத்தினை அடைய வேண்டும். பாலப்பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களின் வழிநடத்துதலையும் அறிவிப்புக்களையும் முழுமையாகப் பின்பற்றியே செயற்பட்டு ஒத்துழைக்க வேண்டும்.