நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ஜே.இ.இ. தேர்வும், செப்டம்பர் 13-ந்தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மன அழுத்தத்தையும், மாணவர்கள் மீதான உளவியல் தாக்கத்தையும் அதிகரிக்கும் வகையிலான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருப்பது மனிதாபிமானமற்ற அணுகுமுறையாகும். எனவே, மத்திய அரசு நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்து, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கும், உயர்கல்விக்கும் சேர்க்கை அனுமதி வழங்கிட ஆவன செய்யவேண்டும்.
தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வையும், கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து, அரியர் உள்பட மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளித்தும் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, நீட், ஜே.இ.இ. தேர்வு ரத்து செய்ய மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தேர்வு ரத்து செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.