மீத்தேன் ஆய்வு பணிகளை கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

343 0

ராமநாதபுரம், அழகன்குளத்தில் மீத்தேன் ஆய்வு பணிகளை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்ககாலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது தொல்லியல் துறை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அழகன்குளம் ஆற்றங்கரை பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு மேற்கொண்ட போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் ஆய்வுப்பணி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனாவால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மீண்டும் இந்த பகுதியில் மீத்தேன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முனைந்திருக்கிறார்கள்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டு வாழ்க்கையையும், கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் நடத்திய வணிகத்தையும் பறை சாற்றும் ஆதாரங்கள் புதைந்து கிடக்கும் அழகன்குளம் பகுதியை எரிவாய்வு ஆய்வு பணிகள் மூலம் சிதைத்து விட ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே, இந்த ஆய்வு பணிகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். அழகன்குளம் ஆற்றங்கரை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.