பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.என்.பிரனாந்துவின் 23 ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று கொழும்பிலுள்ள மகாவலி நிலையத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் அதிகளவான தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.எனினும், தாம் பொறுப்பெடுக்கும் துறைகளில் அனைவரும் பிரகாசிக்க வேண்டும்.நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுவடைந்துள்ளது.
பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.
அரச சேவையில் 60 சதவீதமான பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். இருந்தபோதிலும் தொழிற்சங்க நடவடிக்கையில் அவர்களின் வகிபாகம் குறைவாகவே உள்ளது.எனவே, எதிர்காலத்தில் பெண்கள் தொழிற்சங்க நடவடிக்கையிலும் முன்னணி வகிக்க வேண்டும்.
ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கைகளைப் பொறுத்த மட்டில், ஆசிரியர்கள் முதலில் மாணவர்கள் மத்தியிலும் ஏனைய ஆசிரியர்கள், அதிபர் மத்தியிலும் தமது ஆதரவையும் நல்லபிப்பிராயத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.