கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ம் மற்றும் 3ம் வருடங்களின் கற்றல் நடவடிக்கைகள் யாவும் சனிக்கிழமை முதல் கால வரையறையின்றி இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலாம் வருடத்தின் 16 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
மருத்துவ பீட மாணவர்களின் பகிடிவதை நடவடிக்கைகள் காரணமாக பேரவையின் முடிவுகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பீடத்தின் முதலாம் வருடத்துக்கென கடந்த 15ஆம் திகதி புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவர்கள் மீதான பகிடிவதைக்கு எதிராக பல தடவைகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அதற்கு மாணவர்கள் ஒத்துழைக்காமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 2ம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பீடத்தின் விடுதிக்குச் சென்று பேரவையின் முடிவுகளை அறிவிக்க முயன்ற வேளையிலும் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பதிவாளர் வி.காண்டீபன்,
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நன்மதிப்பு, மற்றும் மாணவர்களின் பெற்றோரின் எதிர்பார்ப்புகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு சகல மாணவர்களும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு துணைபோதல் நிருவாகத்தின் நடவடிக்கைகளுக்கு சரியான முறையில் ஒத்துழைக்காமை போன்ற காரணங்களுக்காக வகுப்புத் தடை விதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.