கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் இன்று (27.11.2016) மாவீரர் எழுச்சிச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
கோப்பாய் மாவீர் துரிலும் இல்லம் தற்போது இலங்கை படையினரின் யாழ் மாவட்ட கட்டளைத் தலைமையகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் வாயிலில் இரு மாவீரர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போன போராளி ஒருவரின் தந்தை மற்றும் ரெலோ இயக்கத் தலைவர் சிவாஜிலிங்கம் ஆகியோரால் மாவீரர் எழுச்சிச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் ,வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சதிஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.பன்னீர்செல்லவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1995 ஆம் ஆண்டு மக்கள் யாழ் குடாநாட்டைவிட்டு மக்கள் வெளியேறியபோது படையினரால் இடித்தழிக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 2002 சமாதான உடன்படிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளால் பொறுப்பேற்கப்பட்டு புனரமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் அங்கு மாவீரர் தினம் அனுஷ்க்கப்பட்டது. இந்நிலையில் சமாதான உடன்படிக்கை முறிவடைந்ததையடுத்து படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துள் படையினர் யாழ் மாவட்ட கட்டளைத் தலைமையகம் அமைத்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்றையதினம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.