யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அங்கு உரை நிகழத்திய ரெலோ இயக்கத்தின் தலைவர் சிவாஜிலிங்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் வீர மறவர்களிளிற்கும் இன்றைய நவம்பர் 27 இல் வீர வணக்கத்தைச் செலுத்துவதாகவும் இந்த விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை நீத்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ்போராட்ட இயக்கங்களைச் சேர்ந்த மாவீரர்களையும் போரின்போது கொல்லப்பட்ட சுமார் ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் இக் கணத்தில் நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.
தமிழினம் எவருக்கும் தலைவணங்காது என்றும் அரைகுறை அரசியல் தீர்வு எனும் எலும்புத் துண்டுகள் வீசப்பட்டால் அதைக் கௌவிக்கொண்டு அடங்கிப்போய்விடமாட்டோம் 2009 மே 18 இல் ஆயுதப் போராட்டமே மௌனிக்கப்பட்டது நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும்வரை அகிம்மை வழியிலான தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.