குருநாகல் அரசவை தகர்ப்பு விவகாரம் – பிடியாணை தொடர்பான தீர்ப்பு நாளை

248 0

குருநாகல் அரசவை தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.

புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுதொடர்பாக குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்ஜீவ விதாரணவுடன் மேலும் நால்வருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தம்மை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்துச் செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்

இதனையடுத்து, அவர்களை ஓகஸ்ட் 24ஆம் திகதி அதாவது இன்று வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.