தாவூத் இப்ராகிம், கராச்சியில் வசிப்பதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பின்னர் பல்டி அடித்தது

264 0

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் வசிப்பதை முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் பின்னர் இதை அந்த நாடு மறுத்தது.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம். இந்தியாவில் மிகவும் தேடப்படும் நபரான அவரை, சர்வதேச பயங்கரவாதியாக கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வரும் தாவூத் இப்ராகிமை கைது செய்து ஒப்படைக்குமாறு அந்த நாட்டிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் மண்ணில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து சாதித்து வருகிறது.

இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை கண்காணிக்கும் பாரீசை மையமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.), பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த மெத்தனப்போக்கு வருகிற அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தால், அந்த நாடு சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போன்றவற்றில் இருந்து கடன்பெற முடியாது. மேலும் எப்.ஏ.டி.எப்.பின் கருப்பு பட்டியலில் ஈரான், வடகொரியாவுடன் பாகிஸ்தானும் இணையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொருளாதார சிக்கலில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது மேலும் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே தனது மண்ணில் இயங்கும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத குழுக்கள் மீது பொருளாதார தடைகளை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சட்ட ரீதியான ஒழுங்குமுறை ஆணைகளை (எஸ்.ஆர்.ஓ.) பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. இதில் முக்கியமாக தாவூத் இப்ராகிம், மும்பை தாக்குதல் குற்றவாளி ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபிஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும், வங்கி கணக்குகளை முடக்கவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த பயங்கரவாதிகள் மீது பயணத்தடை, ஆயுத வர்த்தகத்தடை போன்றவையும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் இந்த பயங்கரவாத குழுக்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான், இதன் மூலம் தங்களை சாம்பல் நிற பட்டியலில் இருந்து வெளியேற்றி வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் எப்.ஏ.டி.எப்.புக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. இந்த பொருளாதார தடை பட்டியலில் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வசித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தங்கள் நாட்டில் வசித்து வருவதை பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக்கொண்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து தாவூத் இப்ராகிமை உடனடியாக கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் பாகிஸ்தானுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்து உள்ளன. ஆனால் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் வசிக்கும் விவகாரத்தில் அந்த நாடு திடீர் பல்டி அடித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாடு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.ஆர்.ஓ.வில் உள்ள தகவல்களின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட சில தனிநபர்கள் அதன் பிரதேசத்தில் இருப்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்வதைப் போல, ஊடகங்களின் சில பிரிவுகளில் வெளியான கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று தெரிவித்து உள்ளது.