சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதாவது விளக்கமறியலிலுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அண்மையில் அழைத்துவரப்பட்டார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி புரிந்த தன்னை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்களாக திட்டமிட்டு சிறைப்படுத்தி வைத்திருப்பதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் புதிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது, குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தமக்கு சேவையாற்றும்படி மட்டக்களப்பு மக்கள் தன்னை தெரிவு செய்துள்ள நிலையில், நாடாளுமன்றம் வருவதற்கு கூட ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோர வேண்டி உள்ளமையினால், இவ்வாறு மக்களுக்கு சேவையாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.