தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்.

1441 0

அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)

பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம்
                                  வதிவிடம்: பிராங்பேட், யேர்மனி..( Frankfurt / main, Germany).( Frankfurt / main, Germany)

இயற்கையின் படைப்பில் மானிடம் ஒரு அரிய படைப்பாகக் கருதப்படுகின்றது.அத்தகைய உன்னதமான மானிடப்படைப்பின் இயல்புகளில் சுதந்திர உணர்வு மேலோங்கி நிற்பது மானிடத்தின் உயர்வுக்கு ஆணிவேராக அமைந்துள்ளது. ஒரு தனிமனிதன் முதல், ஓர் தேசம்வரை சுதந்திர வேட்கையின் உச்சத்தைத் தொடுவதே இலக்காகக் கொண்டுள்ளது என்பது உண்மையின் தரிசனமாகும். இதன் இயற்கை வெளிப்பாடாகவே தமிழீழச் சுதந்திரப் போர் தோற்றம் பெற்றது. தமிழீழப் போரில் ஏற்பட்ட இனவெறி அழிப்பின் காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளில் தமது தேச உணர்வைக் காட்டி நின்ற ஆரம்பகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தேச விடுதலைச் செயற்பாட்டை விரிவுபடுத்தி விடுதலைப் போரைப் பலப்படுத்த ஏற்பட்ட புலம்பெயர் நாடுகளின் கட்டமைப்பில் செயலாற்ற பலர் முன்வந்தனர். அன்றைய காலகட்டத்தில் இருந்த புறச்சூழல் பல நெருக்கடிகளைப் புலம் பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திய காலம், ஒரு நகரைவிட்டு வேறு நகரம் செல்ல அனுமதியில்லை, வதிவிட அனுமதிகாலம் வரையறுக்கப்பட்ட நேரம், இறுக்கமான சட்ட வரைவுகள், இப்படியான காலகட்டத்தில் தேச உணர்வோடு முன்வந்து 1983 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராங்பேட் நகரச் செயற்பாட்டாளராக தன்னை இணைத்துக் கொண்டவர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்கள்.

“சீலன் அண்ணன்” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அன்பு நிறைந்த பிறவி. ஆரம்பகாலச் செயற்பாட்டின் முனைப்பாக பிரதிநிதிகளைத் தன்னுடன் இணைத்து கட்டமைப்பின் கட்டுப்பாட்டு விதிகளின் மரபுகளை மனதில் ஏற்றி தனது செயற்பாட்டை முன்னெடுத்த செயற்பாட்டாளராவார். யேர்மனியின் ஆரம்பகாலப் பொறுப்பாளர்களாக இருந்த உதா அண்ணன், சுதா அண்ணன் காலத்தில் இருந்தே தனது செயற்பாட்டை ஆரம்பித்த முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமரர் வல்லவசீலன் அவர்கள் ஒரு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அன்னாரின் சகோதரர் மாவீரன் லெப்.கேணல் இம்ரான் அவர்களின் உணர்வுகளை தன் இதயத்தில் சுமந்து உணர்வோடு வாழ்ந்த செயற்பாட்டாளராவார்.

சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து வழி நடத்தும் திறமை மிக்கவராக மிளிர்ந்தார். இக்கட்டான சூழல்கள் ஏற்பட்ட காலகட்டத்தில் பொறுப்புகளை ஏற்று செயலாற்றும் பொறுமையும்,திறமையும் கொண்டிருந்தார். பிற்காலத்தில் கெசன் மாநிலப் பொறுப்பாளராக பொறுப்பேற்று 2005ம் ஆண்டுவரை செயலாற்றினார். தமிழீழப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் விசேட மருத்துவப் பொருட்களும், மேலும் சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு விமானம் மூலம் தாயகம் சென்று உணர்வையும், கொடுத்த பணியைச் செய்யும் தன்மையையும் காட்டி நின்ற உணர்வாளர் என்பது அன்னாரின் தேசப்பற்றை காட்டி நிற்கும் செயலாகும்.

அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்கள் நோயுற்ற காரணத்தால் சாவடந்தமை கண்டு நாம் வேதனை கொள்கின்றோம். அன்னாரின் பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் குடும்ப உறவுகளோடும், தோழமை உறவுகளோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து, அவரது ஆத்மா அமைதிபெற இயற்கையை வேண்டி, அவர் நினைவோடு எம் இலட்சியப் பயணங்களை தொடர்வோமென உறுதி கொள்கின்றோம்.

“தேசப் பற்றில் ஆழ்ந்த மாந்தர்
தேச வானில் வீற்றிருப்பர். “

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.