ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 24 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
சட்ட பூர்வமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றை சட்டவிரோதமானது என தெரிவித்து சுங்க பிரிவில் தடுத்து வைத்து போலியான சாட்சிகளை தயாரித்து தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதயங்க வீரதுங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு முதற்தடவையாக எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ள நிலையில் உதயங்க வீரத்துங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அநுர குமார திசாநாயக்க, ஜே.சீ. வெலியமுன மற்றும் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் அறிவித்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.
நிஹால் ஜயதிலக்க என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (21) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மேற்குறித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகாத காரணத்தால் அவர்களுக்கு எதிராக மீள் அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை அடுத்த மாதம் 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.