சுயாதீன ஆணைக்குழுக்களை ஒழிக்க வேண்டாம் – தேசிய மக்கள் சக்தி

243 0

சிறிலங்கா அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருக்கும் அதேவேளை அதன்மூலம் அறிமுகப்படுத்திய சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்ய வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று வலியுறுத்தினார்.

19 வது திருத்தம், ஜனநாயகம் மற்றும் நீதியை உறுதி செய்வதில் தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுதந்திரமாக செயற்படும் ஆணைக்குழுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

“19 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முக்கியமானவை. 19 வது திருத்தத்தின் முற்போக்கான அம்சங்கள் ஒழிக்கப்படக்கூடாது” என கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு 19 ஆவது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்கும், அனைத்து அதிகாரங்களையும் ஒரு தனி நபருக்கு வழங்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.