தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28–வது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமான சி.எச்.வித்யாசாகர் ராவ் தலைமையில், வருகிற 3–ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28–வது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமான சி.எச்.வித்யாசாகர் ராவ் தலைமையில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வருகிற 3–ந்தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்கிறார். மத்திய அரசின் சுகாதாரப்பணிகள் இயக்குனரக தலைமை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சே.கீதாலட்சுமி வரவேற்பு மற்றும் செயலாக்க உரைஆற்றுகிறார்.
சிறப்பு உயர்நிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் மற்றும் உடல் நலம் சார்ந்த ஏறத்தாழ 20 ஆயிரத்து 489 மருத்துவ மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 266 மாணவ–மாணவிகளுக்கு நேரடியாகவும், 15 ஆயிரத்து 223 மாணவ–மாணவிகளுக்கு கல்லூரி வாயிலாகவும் வழங்கப்படுகிறது.
இவ்விழாவில், மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள 141 மாணவ–மாணவிகளுக்கு 181 தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தமிழக கவர்னர் வழங்கி சிறப்பிக்கிறார்.