சிறிலங்காவில் தனி வீட்டுத் திட்டங்களில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மலையகம் என்றாலே, தோட்டத் தொழில் மட்டும்தான் என சிலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், விவசாயம் உட்பட பல தொழில்கள் அங்கு உள்ளன.
வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் எனப் பலர் உருவாகியுள்ளனர். எனினும், மலையகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு என்ன காரணம்? தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவில்லை.
ஆனால், மக்களின் உண்மையான பிரச்சினைகள் எவை என்பதை ஜனாதிபதி கண்டறிந்துள்ளார். மலையகத்திலுள்ள ஆறு பிரதான வைத்தியசாலைகளிலும், போதுமான வசதிகள் இல்லை. பாடசாலைகளிலும் வளங்கள் முழுமையாக இல்லை. இவை தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிலோன் டீ என்ற நாமம், சரிவைச் சந்தித்துள்ளது. அதனைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த விடயமும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்றது. சிறுதோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளையும் எடுத்துரைத்துள்ளார். மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று நிறைய பேர், வெளிநாடு சென்று கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு, உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், கண்காணிப்பு குழு மூலம் ஆராய்ந்தோம். 500 வீடுகளே கட்டப்பட்டுள்ளன.
ஏனையவை அரைகுறையில் உள்ளது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என பழமொழியொன்று உள்ளது. எனவே, வீட்டுத் திட்டத்தில் ஊழல் செய்தவர்களை கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்துவோம். எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான், தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழிகளில் எனது பயணம் தொடரும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.