பாகிஸ்தானில் நாடக நடிகை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் இஸ்மத்பைக். இவர் நாடக நடிகையாக இருந்தார். நேற்று லாகூரில் உள்ள ஒரு அரங்கில் நாடகம் நடந்தது.
அதில் பங்கேற்று கிஸ்மத் நடனம் ஆடினார். நாடகம் முடிந்ததும் இரவில் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது காரை மற்றொரு காரிலும், மோட்டார் சைக்கிளிலும் மர்ம நபர்கள் பின் தொடர்ந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதியில் சென்ற போது அவரது காரை மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் அவரை சரமாரியாக துப்பாக்கியால் 11 தடவை சுட்டனர். அதில் அவரது கால்கள், வயிறு மற்றும் கைகளில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே சாமர்த்தியமாக காரை ஓட்டிய டிரைவர் நடிகை கிஸ்மத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அதற்குள் உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியது. எனவே வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நடிகை கிஸ்மத் ஏற்கனவே ஒருவரை காதலித்தார். அவரை உதறி தள்ளிவிட்டு தற்போது பைசாபாத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் தொடர்பு வைத்து உள்ளார். எனவே, அவரை முன்னாள் காதலன் கூலிப்படையை வைத்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.