விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

290 0

201611231751456920_mk-stalin-executives-plan-to-will-thoothukudi-special_secvpfதமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்ல, அடி மனதை உலுக்கும் விதத்தில் இருக்கிறது. கடந்த 3 வாரங்களில் மட்டும் 14 விவசாயிகள் இறந்து போயிருப்பது அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் நலன் புறக்கணிக்கப் படுவதை படம் பிடித்து காட்டுகிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் உரிமைகளைப் புறக்கணிக்கும் மத்திய அரசின் மெத்தனமும், அ.தி.மு.க. அரசின் பாராமுகமும் தமிழக விவசாயிகளின் அநியாய உயிர்ப்பலிகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளன. இதுகுறித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து கட்சி கூட்டத்தை அ.தி.மு.க அரசு உடனே கூட்ட வேண்டும் என்றும் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அ.தி.மு.க. அரசு எதையும் நிறைவேற்றவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற என்னை பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் சந்தித்து விவசாயிகளின் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவற்றுள் முக்கியமாக, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்ற பயிர்களின் உற்பத்தி செலவுக்கு ஏற்ற வகையிலும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.

தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும். அடுத்த விவசாய காலம் தொடங்கி தண்ணீர் வரும் வரைக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

சென்ற நிதி ஆண்டு (2015-16) பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் தயாராக இருந்தும் மாநில அரசின் புள்ளியியல் துறை சரியான விவரங்களை வழங்காததால், இழப்பீடு கிடைக்காத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாண்டு பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை மாநில அரசே செலுத்துவதுடன், காப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை காலஅவகாசம் தர வேண்டும். கரும்பு நிலுவைத்தொகை முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் நலனுக்கான இத்தகைய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பரிசீலித்து முழுமையாக ஏற்பதே விவசாயிகளின் உயிர் இனியும் பறிபோகாமல் காப்பதற்கான ஒரே வழியாகும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.