மதுரைக்கு வந்தது எந்த வகை வெட்டுக்கிளிகள்?- பூச்சியியல் துறை பேராசிரியர் விளக்கம்

302 0

மதுரையில் படையெடுத்து வருவது எந்த வகை வெட்டுக்கிளிகள் என்பது குறித்து ஓய்வு பெற்ற பூச்சியியல் துறை போராசிரியர் விளக்கம் அளித்தார்.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு முதல் முதலில் தொடங்கியது குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களின் தான். அங்கு வந்த கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர் வகைகளை சூறையாடி தங்களுக்கு இரையாக்கி கொண்டன. சாகுபடி செய்த பயிர்கள், மரம், செடி, கொடிகள், பூக்கள் மற்றும் பிஞ்சுகள் என பசுமையாக தெரியும் அனைத்தையும் உணவாக மாற்றியது. இதனை அழிக்க மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முயற்சியால் வெட்டுக்கிளிகள் அழிந்தன.

இந்தநிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்திற்கு படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

மதுரைக்கு வந்தது சாதாரண வெட்டுக்கிளிகளா அல்லது வட மாநிலங்களில் பயிர்கள் மீது தாக்குதல் நடத்திய பாலைவன வெட்டுக்கிளிகளா என விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர். இது குறித்து ஓய்வு பெற்ற பூச்சியியல் துறை பேராசிரியர் சாமியப்பன் கூறியதாவது:-

மதுரை பகுதியில் தற்போது பயிர்களை உணவாக்கி வருவது, நெற்பயிர்களை உணவாக உட்கொள்ளும் ஒரு வகை சாதாரண வெட்டுக்கிளிகள் தான். இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், இவைகள் மொத்தமாக ஒரு இடத்தில் லட்சக்கணக்கில் கூடியிருப்பது தான் ஆபத்து. இவைகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. அதனால் இவை வெளியிடங்களில் இருந்து வரவில்லை. உள்ளூரிலேயே முட்டையிட்டு பெருமளவில் இனப்பெருக்கம் செய்திருக்கிறது. அதற்கேற்ற கால நிலைகள் நிலவி வருவதால் இவைகள் இங்கே இனப்பெருக்கம் செய்திருக்கலாம்.

நெற்பயிர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது போல் எளிமையான முறையில் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்கலாம். ஆளில்லா சிறிய ரக விமானம்(டிரோன்) மூலம் கிருமி நாசினியை மேலிருந்து தூவலாம். வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் கிருமிநாசினிகளை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்கலாம். அதுபோல், அரசு அறிமுகம் செய்து பயன்படுத்தி வரும் கிருமிநாசினி மருந்துகளை பயன்படுத்தலாம். அதிக பாதிப்பு ஏற்படுத்தும் முன், அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருமுன்காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.