அஜ்மானில் கொரோனா ‘லேசர்’ மையம்- பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்

296 0

அஜ்மானில் கொரோனா ‘லேசர்’ பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி நேற்று தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்.

அமீரகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அஜ்மானில் விரைவாக கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் கொரோனா ‘லேசர்’ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அமீரகத்தின் வடக்கு பகுதிகளில் இத்தகைய நவீன பரிசோதனை மையம் முதலாவதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 50 திர்ஹாம் செலவில் 3 நிமிடத்தில் இந்த பரிசோதனைகள் செய்யப்படும்.

இந்த மையத்தில் 20 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தினமும் 6 ஆயிரம் முதல் முதல் 8 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யும் வகையில் வசதி உள்ளது.

இந்த கொரோனா பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘அஜ்மான் பகுதியில் கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்தும் வகையில் நவீன ‘லேசர்’ உதவியுடன் மேற்கொள்ளப்படும் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவுவது முற்றிலுமாக தடுக்கப்படும்’’ என்றார்.

இந்த மையத்தை தொடங்கி வைத்த பின்னர் அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி முதல் ஆளாக தனக்கு கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார். மேலும் அவருடன் வந்தவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொண்டனர்.

இந்த புதிய கொரோனா ‘லேசர்’ பரிசோதனை மையத்தின் பணிகள் குறித்து அந்த மையத்தின் திட்ட இயக்குனர் அப்துல்லா அல் ரஷிதி பட்டத்து இளவரசருக்கு விவரித்தார். புதிய மையத்தின் திறப்பு விழாவில் அஜ்மான் அரசின் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.