நிறவெறி, இனவெறிக்கு ‘வாக்சின்’ கிடையாது: ட்ரம்பைக் குத்திக் காட்டிய கமலா ஹாரிஸ்

372 0

அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் தெற்காசிய பெண்மணியாக துணை அதிபர் வேட்பாளர் பதவிக்கு நிற்க தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை நினைவுகூர்ந்தார்.

சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்பதை ஜனநாயகக் கட்சி மீண்டும் வலியுறுத்தி செயல்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும். ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர் இன்னும் எத்தனையோ பேர்களைக் குறிப்பிட வேண்டும் நம் குழந்தைகள், நாம் அனைவருமே, சம நீதி என்பதற்காகப் போராட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெறாமல் முழு விடுதலை சாத்தியமல்ல.

பெண் உரிமைக்காக போராடிய தலைவர்கள் மேரி சர்ச் டெரெல், மேரி மெக்லியாட் பெத்யூன், ஃபானி லூ ஹேமர், டயான் நேஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி மற்றும் ஷிர்லி கிரிஷோம் ஆகியோரது சிவில் விடுதலைக்கான போராட்டங்கள், கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கர்களாக அவர்கள் தோள்களில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு பிராபல்யத்துக்கும் இடம்கொடுக்காமல் அவர்கள் போராடினர், ஊர்வலம் நடத்தினர், இவர்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானித்தவர்கள். இவர்கள்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோரது ஒளிமிகுந்த தலைமைக்கு முன்னோடிகளாவார்கள்.

அடுத்தவர்களுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் அர்த்தம் என்று என் தாயார் ஷியாமளா கோபாலன் எனக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய இரவில் அவர் இங்கு இருக்க வேண்டும் என்று என் மனம் கருதுகிறது. மேலேயிலிருந்து என்னை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

என்னை என் அம்மா பெற்ற போது நான் உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் நின்று பேசுவேன் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு என்னை நிற்கவைத்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார் கமலா ஹாரிஸ்.