வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்: அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக முறைப்படி அறிவிப்பு

295 0

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் தான் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டார்.

இதன் மூலம் அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றைப் படைத்தார்.
அமெரி்க்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முறைப்படி அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஜனநாயகக் கட்சி தன்னை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததை கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஜனநாயகக் கட்சி என்னை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததை நான் ஏற்கிறேன். இந்த அறிவிப்பை நான் அனைத்து கறுப்பினப் பெண்களுக்கும் உரிமைக்காக போராடும் பெண்களுக்காக சமர்பிக்கிறேன். இனிமேல் தீர்மானத்துடன் போரிடுவோம், நம்பிக்கையுடன் போரிடுவோம், ஒருவொருக்குள் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு உறுதியுடன் போராடுவோம்.

இந்த நேரத்தில் இந்தியாவி்ன் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரி்க்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும். தனது 19வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா. அவரின் தோள்களில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் தலைமை தோல்வி அடைந்த தலைமை. அமெரிக்காவில் நடக்கும் உயிரிழப்புகளை, சோகங்களை அரசியல் ஆயுதங்களாக ட்ரம்ப் பயன்படுத்துகிறார். ட்ரம்ப்பின் தலைமை தோல்வியால்தான் கரோனாவில் லட்சக்கணக்கான உயிர்களை இழந்தோம், வாழ்வாதாரத்தை இழந்தோம்.

தேசத்துக்கு முக்கியமான பணிகளை, வித்தியாசமாக, சிறந்ததாகச் செய்யும் வேட்பாளரைத் தான் அதிபராக தேர்வு செய்யவேண்டும். கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர், லத்தீன்அமெரிக்கர், ஆசியர்கள் என அனைவரையும் பிரி்க்காமல் ஒன்றாக இணைப்பவராக அந்த அதிபர் இருக்க வேண்டும். தேசத்தின் எதிர்காலத்தை அனைவரையும் சேர்ந்து கட்டமைக்க முயல்பவராக அதிபர் இருக்க வேண்டும்.

அந்த சிறந்த அதிபராக நாம் ஜோ பிடனைத் தேர்வு செய்ய வேண்டும். ஜோ பிடன் துணை அதிபராகஇருந்தபோதிருந்து அவரை எனக்குத் தெரியும். நான் பிரச்சாரம் செய்தபோது பிடனைச் சந்தித்துள்ளேன். எனக்கு முதன்முதலில் என்னுடைய தோழியின் தந்தை என்றுதான் ஜோ பிடன் எனக்கு அறிமுகமாகினார்.

இவ்வாறு ஹாரிஸ் தெரிவி்த்தார்.