ஐ.தே.க.வுக்கு யார் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல- சரத் பொன்சேகா

229 0

‘ஐக்கிய தேசியக்கட்சிக்கு யார் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல’ என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ,  “ஐக்கிய தேசியக்கட்சியின்  ஆதரவாளர்கள் ஊடாகத்தான் நாம் நாடாளுமன்றத்துக்கு செல்ல இருக்கின்றோம்.

எனினும்,  ஐக்கிய தேசியக்  கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் பின்புலமொன்று இல்லாமலேயே இம்முறை நாடாளுமன்றத்துக்கு நுழைய இருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, 25 வருடங்களாக கட்சியை சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அவரது செயற்பாடுகளின் பிரதிபலன்களைதான் நாம் தற்போது பார்க்கின்றோம்.

மேலும் பலரின் பெயர் கட்சியின் தலைமை பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தாலும், எல்லோரும் ஒரே பண்புகளை கொண்டவர்கள்தான்.

கட்சியில் யார் வந்தாலும் பெரியதொரு மாற்றம் ஏற்படப்போவதில்லை; கட்சிக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

நான் நினைக்கின்றேன், இவர்களும் சிறிகொத்தவை கைப்பற்றுவது தொடர்பிலேயே ஆர்வமாக இருப்பார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.