சிறீலங்கா காவல்துறையினரின் உத்தரவுகளையும் மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தீபமேற்றவுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் தீபமேற்றி மாவீரர் நினைவுநிகழ்வை நடாத்தவுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணச் செயலகத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாளை நினைவு கூர முடியாது, என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களும், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்ற அதேவேளை, உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்குத் தடை இல்லை என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்புரவாக்கும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.