யாழ் மாநகர சபைக்கு ஒன்றரை கோடி வருமானம் இழப்பு!

273 0

நல்லூர் மகோற்சவ காலத்தில் யாழ்.மாநகர சபைக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெறும். ஆனால் இம்முறை அவ்வருமானம் இழக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

“இவ்வருடம் யாழ் மாநகர சபை பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 349 கடைகளுக்கான இரண்டு மாத வாடகை சலுகையாக சபை அனுமதியோடு விலக்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்முறை நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவ காலத்தில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த முறை நல்லூர் உற்சவ காலத்தில் அனைத்து செலவுகளையும் சபையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால் சந்தை வருமானம் போன்ற ஏனைய வருமானங்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக குறைந்தளவாகவே சபைக்கு கிடைத்துள்ளது.” – என்றார்.