கம்யூனிச புரட்சியாளரரும் கியூபா தேசத்தின் முன்னாள் அதிபருமான பிடல் கஸ்ட்ரோ அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி தாங்கொனாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிமைத்தளையில் இருந்து கியூபா தேசத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாது உலகின் முன்மாதிரி தேசமாக கியூபாவை கட்டமைத்த பிடல் கஸ்ட்ரோ அவர்கள் உலகின் அதிகூடிய காலம் (49 ஆண்டுகள்) ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பு வகித்தவர் என்ற மங்காத புகழுடனும் வாழும் காலத்திலேயே மதிக்கப்பட்ட பெருந்தலைவராவார்.
அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் இரும்புக்கரத்திற்குள் சிறைவைக்கப்பட்ட நிலையிலும் நிலை தடுமாறாது உறுதியுடன் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று தீர்க்கமாக உரைத்த அந்த ஒற்றை வார்த்தை விடுதலை உலகின் மந்திரச் சொல்லாக என்றென்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
பிடல் காஸ்ட்ரோ அவர்களது உடல் கூட்டில் இருந்து காலன் அவரது உயிரைப் பிரித்தெடுத்துச் சென்றாலும் புரட்சி உலகின் முழு நிலவாக என்றென்றும் ஒளிபரப்பிக் கொண்டிருப்பார் என்பது திண்ணம்.
விடுதலை உலகின் ‘மாமனிதர்’ பிடல் காஸ்ட்ரோ அவர்களது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கியூபா தேசத்து மக்களுக்கும் உலகெங்கும் விடுதலைக்காக நெருப்பில் நீராடிவரும் புரட்சியாளர்களுக்கும், புரட்சியின் புனிதம் உயிர்பெறும் வகையில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உலகத் தமிழர்களின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!