தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியக் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்பு சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற நிலையில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ் பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வழங்கப்பட்டது
கடந்த 2006 இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நாவிதன்வெளி பிரதேசசபையில் போட்டியிட்டு உதவி தவிசாளராக கலையரசன் தெரிவானார். பின்னர் 2008இல் தவிசாளரானார். பின்னர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவாகினார். அதன்பின்னர் மீண்டும் 2018 உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானார். அப்பதவியை தற்போது இராஜிமா செய்துள்ளார்.
கடந்த 2015 பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட க.கோடீஸ்வரன் 17,799 வாக்குகளைப்பெற்று தெரிவானார். அடுத்த நிலையில் 14,723 வாக்குகளை கலையரசன் பெற்றதுடன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடபோதும் ஆசனம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.