சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் 185,118 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 1,120 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, முப்படையினரின் கீழ் இயங்கி வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 30,524 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
எனினும் குறித்த மையங்களில் 4,756 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் நால்வர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதன்படி, இதுவரை இரண்டாயிரத்து 870பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாயிரத்து 890 பேரில் இன்னும் 209பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாட்டில் வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.