சிறிலங்காவில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை அமுல்படுத்துவதில் குறைபாடுகள் காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தை மேற்கோள்காட்டி இலங்கையில் வெளியாகும் ஆங்கில ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 9 வருடங்களில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 48 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 413 முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளில், 185 வழக்குகள் மாத்திரமே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து 305 முறைப்பாடுகள் பொலிஸில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 296 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் தற்போது நிலுவையில் உள்ளன.
அந்தவகையில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை அமுல்படுத்துவதில் குறைபாடுகள் தொடர்ந்து காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் தகவலை அடிப்படையாக கொண்டு குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.