சிறிலங்காவில் 13 மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை நீக்கும் நடவடிக்கைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு

241 0

சிறிலங்காவில் அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என கூட்டணியின் பிரதித்தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வே.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 28 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மலையக தமிழருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

1977 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை அமைச்சரவையில் மலையக தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

அதேபோல் புத்தசாசனத்துக்கு தனி அமைச்சொன்று இருக்கும் நிலையில், ஏனைய மதங்களுக்கான அமைச்சுகள் நீக்கப்பட்டு சமய விவகார அமைச்சென உருவாக்கப்பட்டு அவை சார்ந்த திணைக்களங்கள் பிரதமரின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டும். அத்துடன் சில அமைச்சுகள் பொருத்தமற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. அதனை முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம். வேண்டுமானால் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

13 ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மையின மக்களுக்காக உருவானது. அதில் கை வைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.