சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்வு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

344 0

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சி நேற்று காலையில் நடைபெற்றது. அப்போது கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இதுவரை மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது சித்த மருத்துவ முறை சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போரில் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றதுபோல கொரோனா தொற்றுக்கு எதிராக பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போராடி அரசு வெல்லும் என்பது உறுதி.
குறுகிய காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
‘நீட் தேர்வை’ நடத்தக்கூடாது என்று கொள்கை அளவில் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வினால், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது.
அதை நிவர்த்தி செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மருத்துவர் ஆகும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளில், 6 முறை உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டி அரசு சாதனை படைத்துள்ளது. டெல்டா பகுதியிலுள்ள 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் தற்போது குறுவை நெல் பயிர் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலும் புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்த ஆண்டே தொடங்கப்படும்.
இந்தியாவின் கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வரலாற்றுச் சாதனையாக கடந்த ஜூன் 28-ந் தேதியன்று 39.1 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்துள்ளது.
பள்ளிகளில் வசதிகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 49 சதவீதத்தை எட்டி, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
சமீபத்தில் தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சார்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற நிலம் எடுப்பு பணிகள் முடிந்து, அதை நிர்வகிக்கவும், பராமரிக்கவும், அறநிறுவனம் ஒன்று எனது தலைமையில் நிறுவ ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது விரைவில் திறக்கப்படும்.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் குற்றங்கள், களவுகள் மற்றும் விபத்துகள் குறைந்து, சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தி, பாதுகாப்பான அமைதியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.
தமிழ்நாடு புதிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. கொரோனா காலத்தில் மட்டும், இதுவரை 41 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.30 ஆயிரத்து 664 கோடி முதலீடும், 67 ஆயிரத்து 212 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய ரூ.7,043 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. எனவே, தமிழ்நாடு பொருளாதாரத்தில் தனது இயல்பு நிலையை வெகு விரைவில் அடைந்து, தொடர்ந்து முன்னிலையில் இருக்கும்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.