சிறிலங்காவில் 13 ஆவது திருத்தத்தில் உள்ள பாதகமான உட்பிரிவுகள் அகற்றப்படும் – சரத் வீரசேகர

260 0

சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிரிவுகளும் நீக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என கூறினார்.

13 வது திருத்தத்தை கடுமையாக எதிர்த்ததாக தன்னிடம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினை வழங்கியமை விதியின் விளையாட்டாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பில் உள்ள அனைத்து கடுமையான சட்டங்களையும் அகற்ற அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு உள்ளூராட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நாட்டின் ஒவ்வொரு நகரத்தையும் அழகாக மாற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர உறுதியளித்தார்.

இதேவேளை அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்ற அமைச்சின் ஊழியர்கள் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.