ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமிடம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்றது என்பது முன்கூட்டியே தேசிய புலனாய்வு பிரிவினருக்கு தெரியுமென சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு துறை பணிப்பாளர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நிலாந்த ஜெயவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “2019இல் வனாத்தவில்லில் வெடிமருந்துகள் மீட்கப்பட்ட பின்னர் நான் சஹ்ரான் ஹாசிமின் திறமையை உணர்ந்தேன்.
எனினும், சஹ்ரான் ஹாசிம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வைத்திருந்த வெடிமருந்துகள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவிக்கு எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் கிடைக்கவில்லை.
மேலும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு அமைப்பு எச்சரித்ததை தொடர்ந்து நான் சஹ்ரான் தொடர்பாக ஆராய்ந்தேன்.
அதன்பின்னர் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு விடுத்த எச்சரிக்கை குறித்து பொலிஸ்மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தெரியப்படுத்தினேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.