சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட வாரத்திற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல் தெனிய கூறினார்.
இதன் போது கைதிகளுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்களை தவிர வேறு எவற்றையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அவர், “வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச்செய்யப்பட்டது.
ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட வாய்ப்பிருப்பதனால், அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவதற்கு தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய உரிய சுகாதார விதிமுறைகளை மேற்கொண்டு விரைவில் கைதிகளை பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
அதற்கமைய இன்று சனிக்கிழமை முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இதன்போது கைதியொருவரை வாரத்திற்கு ஒருவர் மாத்திரமே பார்வையிட முடியும். இந்நிலையில் இவ்வாறு பார்வையிட வருபவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்திருக்க வேண்டும்.
கைதிகளை பார்வையிட வருபவர்கள் கைதிகளுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்களைத்தவிர வேறு எந்த பொருட்களையும் பெற்றுக் கொடுக்க முடியாது. அதற்கமைய உணவு பொருட்களை கொடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.